சிறிலங்காவிற்கான பயண எச்சரிக்கையை நீக்கியது பிரித்தானிய அரசு!
போர்நிலவரங்கள் காரணமாக சிறிலங்காவிற்கு பயணம் செல்பவர்கள் மீது விடுத்திருந்த எச்சரிக்கையை பிரித்தானிய அரசு நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு மட்டுமே விடுக்கப்பட்டிருந்த இவ் எச்சரிக்கை முற்றாக நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கான பிரிட்டனின் பிரதி உயர் ஸ்தானிகர் மார்க் கூடிங் தலைமையில் உயர்ஸ்தானிகராலயத் தூதுக்குழு மேற்படி பகுதிக்கு விஜயம் செய்து பாதுகாப்பு மதிப்பீடுகளை மேற்கொண்டதையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹேய்ஸ் கூறுகையில், இந்த மாற்றத்தின் மூலம், இலங்கையின் எந்தவொரு பாகத்திற்கும் செல்வதற்கு எதிரான எமது எச்சரிக்கை எதுவும் இனிமேலும் இல்லை எனத் தெரிவித்துள்ளதாக கொழும்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இப்பகுதிகளில் நிலக்கண்ணி அச்சுறுத்தல் இருப்பதையும் அப்பகுதிக்குச் செல்வதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையென்பதையும் அங்கு விஜயம் செய்ய விரும்பும் பிரித்தானியர்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளதாக குறிப்பிட்ட இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இப் பயணத்தடை நீக்கம் சிறிலங்காவின் சுற்றுலாப் பயணத்துறையின் வளர்ச்சிக்கு மேலும் உதவும் என்றே கணிப்பிடப்பட்டுள்ளது.